Wednesday, July 26, 2017

இது ஒரு விழிப்புணர்வு பதிவு - மசூர் தால் (பருப்பு)


பொதுவாவே பள்ளி படிக்கும் காலங்களில் பள்ளியில் தினமும் சாம்பார் சாதம் தான் போடுவாங்க சத்துணவு என்ற பேரில்... சாம்பாருக்காக பயன்படுத்தப்படும் பருப்பு ஒருவித சிவப்பு கலர்ல இருக்கும்.. ரொம்ப ஈசியா வெந்துடும்.. பேர் மசூர் தால்னு சொல்வாங்க..

செம்ம வாடையா (துர்நாற்றமாக) இருக்கும். அந்த வாடை சிலருக்கு பிடிக்கும், பலருக்கு பிடிக்காது.ஆனாலும் பள்ளிக்கூட சாப்பாட்டையே சாப்பிடும் நிலை உள்ளவர்களுக்கு அதெல்லாம் பெரிய வாடையா இருக்காது..


இன்னும் சொல்லப் போனா, சத்துணவு என்று பள்ளிக் கூடங்களில் போடப்படும் பெரும்பாலான உணவு சத்தை விட நோயையே அதிகம் தருகிறது.. காரணம் புழு பூச்சிகள் நிறைந்த அரிசி, அத சரியா கழுவக் கூட சோம்பேறித்தனம் படும் சத்துணவு பொறுப்பாளிகள். அந்த சோற வடிச்சு ஒரு சாக்குல கொட்டுவாங்க பாருங்க.. அந்த சாக்கு சுத்தம் செய்து கழுவாம கூட அது மேலையும், இது மேலையும் சுத்தமற்ற பல இடத்தில் போட்டு காய விடுவாங்க..  இது அனைத்து பள்ளிகளிலும் அப்படி நடக்கிறதா என்று தெரியாவிட்டாலும் சில பள்ளிகளில் நடந்தது உறுதி, கண்ணால் கண்டவர்களில் நானும் ஒருவள். அதாவது நான் படித்த பள்ளியில். ஒரு கேள்வி கேக்க முடியாது, கேட்டா சோறு கிடைக்காது.


தென் முட்டை குட்டி குட்டியா சத்துணவுக்காகவே தயாரிக்கிற முட்டை போல் அவ்ளோ கவிச்சியா இருக்கும்... ஓடுகள் முழுதாக உரித்தும் உரிக்காமலும் சுத்தமற்ற உப்புத் தண்ணியிலும் போட்டு அவித்து பல நேரம், ஓட்டோட அந்த தண்ணீரில் இருந்து எடுத்து நேரா மாணவர்கள் வாங்கும் சோறு தட்டில் போடுவாங்க. பல நேரங்களில் பல பேருக்கு அந்த சாப்பாடு என்றாலே ஒரு வித மன உளைச்சல் தரும். அந்த அளவுக்கு சிலத வார்த்தைகளால் சொல்ல முடியாது. அனுபவித்தவர்களுக்கு புரியும்.


ஆனால் இப்போ எல்லாம் மாறிவிட்டதாவும், சத்தா, சுகாதராம சோறு போடுறதாவும் சொல்லிகிறாங்க.. இப்ப படிக்கிற பிள்ளைகளிடம் அல்லது பள்ளியில் நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும். நான் படிச்ச காலத்தில் உமட்டிக் கிட்டே இத சாப்பிடுவோம்.. பசிக்கு வேற வழி இல்லையே.. வீட்டில் இருந்து பள்ளிக் கூடம் இரண்டுக் கிலோ மீட்டர் அல்லது அதுக்கு மேல நடந்து போகணும். வீட்டில் சமைத்த சுத்தமான பழைய சோறே இருந்தாலும் அத நடந்து போய் சாப்பிட்டு வரக் கூடிய அளவில் மதிய உணவு இடைவெளி இருக்காது.. எடுத்து வரக் கூடிய சூழலும் பல நேரங்களில் அமையாது. ஏனா தொடர்ந்து வாங்கலன்னா சத்துணவு வாங்குபவர்கள் பட்டியலில் இருந்து பேர நீக்கிடுவாங்க. பல காரணங்களினால் சத்துணவு தான் சாப்பிட்டாகணும் என்பது பலரின் கட்டாய நிலை.


இப்போ என்ன சொல்ல வர்றேன்னா மேல சொன்ன மசூர் பருப்பு இப்போக் கூட நாங்க பயன்படுத்துகிறோம் துபாயில். சீக்கிரம் வெந்துடும், முன்ன போல் வாடை இல்லை, விலைக் கம்மின்னு. ஆனால் அதில் இவ்வளவு உடல் நலக்குறைவு ஏற்படுத்தும் நச்சுத்தன்மை உள்ளது என்பதை அறிந்திருக்கவில்லை.


இந்தப் பருப்பு தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன்னமே தடைவிதிக்கப்பட்டு உள்ளது. காரணம் இந்த பருப்பில் உள்ள பயன்களை விட அதில் உள்ள நிறத்தின் நச்சுத் தன்மையால் நரம்புக் கோளாறு, முடக்கு வாதம் மற்றும் மூளைக் கோளாறு வருகிறது. நச்சுத் தன்மை கலந்து உள்ள எந்த பொருளையும் எப்போதாவது எடுத்துக் கொள்வதை விட தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது பாதிப்பு பெரிதாகவும் குறுகிய காலத்திலும் ஏற்ப்படுகிறது.அரசாங்க பள்ளிகளையும், அதில் கிடைக்கும் உணவையும் நம்பி எத்தனையோ மக்கள் தங்கள் குழந்தைகளின் அடிப்படைக் கல்வி முதலே அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். இதனால் சிறு வயது முதலே அந்த பருப்பை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவைக் குழந்தைகள் தொடர்ந்து எடுத்து வருவதால் மேற்சொன்ன நோய்களால் குழந்தைகள் பாதிப்படைகிறார்கள் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது மட்டும் அல்லாமல் ரேசன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை மட்டும் நம்பி வாழும் மக்கள் நம் நாட்டில் ஏராளம்.

இந்த பிரச்சினையின் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மஹாரஸ்டிராவில் இந்த பருப்பிறகு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் அங்கும் பள்ளிகளில் இந்த பருப்பினாலான உணவை உண்ட குழந்தைள் பல நோய்களுக்கு ஆளாகி உள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவின் ஒரு மாநிலத்தில் தடை விதிக்கப்பட்ட ஒரு உணவு பொருள் மற்றொரு மாநிலத்தில் அங்கீரிக்கப்பட்டுள்ளது அதாவது சில ஆண்டுகள் முன் வரை மஹாரஸ்டிராவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையே ஏற்றுக் கொள்ள முடியாத வேலையில், தடை விதிக்கப்பட்ட அதே மாநிலத்திற்கு மீண்டும் அந்த பருப்பைக் கொள்முதல் செய்யவும், அதை ரேசன் மற்றும் பள்ளிக் கூடங்களில் சத்துணவில் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்து அனுமதி அளித்துள்ளது. என்னக் கொடுமை இது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொது நல வழக்கு ஒரு புறமிருக்க,

வளரும் குழந்தைகளுக்கும் அதை உண்ணும் நடுத்தர வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பு என்று தெரிந்த ஒன்றை மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பது மிகப் பெரிய கேவலமான செயல்.

ஏற்கனவே தமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயலும் பல கார்ப்பரேட் முதலைகளுக்கும் அதற்கு தீனி போட்டு வளர்த்து விடும் அதிகாரிகளுக்கும் துணை போகும் விதமாக மாநில அரசும் களத்தில் குதித்து இருப்பது (இது என்ன புதுசான்னு நீங்க கேட்பது புரிகிறது) தமிழகத்தை இந்திய வரைப்படத்தில் இருந்து முற்றிலும் நீக்க முயற்சிக்கும் இரத்த காட்டேரிகளுக்கு மனிதர்களை இரையாக்கும் புதுவித மற்றொரு அணுகுமுறை என்று கூறலாம்.

வாழ்வாதாரத்திற்காக வாங்கும் அல்லது பள்ளிகளில் வழங்கப்படும் உணவினை மட்டுமே நம்பி செல்லும் உயிர்களை பலி கொடுக்க முன் வரும் அரசு அதிகாரிகளும், அரசும் மக்களை எல்லாவற்றிற்கும் பரிசோதனைக்கு பயன்படுத்தும் மிருகங்களாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல். 

"குறைந்த விலையில் வழங்கப்படும்" என்ற ஒரு சொல்லைக் கொண்டே மக்களே மெல்ல  மெல்லக் கொல்லும் விசத்தை வாங்க வைத்து விடலாம் என்ற யுக்தியை கார்பேரேட்காரர்கள் பயன்படுத்துவதை விட அரசு வட்டாரங்கள் மக்களை கவர அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது வேதனையான செயல்.

ஆக்கம்: யாஸ்மின் ரியாஸ்தீன்


Tuesday, April 4, 2017

குழந்தையின்மை – குற்றம் 23

காலங்காலமாக பெண்களுக்கு உள்ள பல தலையாய பிரச்சினைகளில் குழந்தையின்மையும்  ஒன்று. எத்தனை நவீனமாக உலகம் மாறினாலும் சில பிரச்சினைகள் மட்டும்  நவீனத்துவத்துக்கு ஏற்ப மாறி வருகிறதே தவிர அதற்கு தீர்வு என்ற ஒன்று அமைவதே இல்லை எனலாம்.

உடலளவில் குழந்தை பெறுவதற்கு கணவன், மனைவி இருவரில் யாருக்கு பிரச்சினை இருந்தாலும் மனைவியை மட்டும் குற்றவாளியாக்குவதும், கொடுஞ்ச்சொற்களை வீசுவதும், உற்றார் உறவினர் “ஒரு குழந்தை பெத்துக்க கூட லாயக்கில்லை என்ற” கொடும் பார்வையால் சுட்டெரிப்பதும், இதையெல்லாம் மீறி ஒரு ஆணுக்கு எத்தனை பெரிய குறைகள் இருந்தாலும் மருத்துவம் என்பது பெண்ணையே சார்ந்துள்ளது. அந்த பெண்ணுக்கே அனைத்து விதமான வலிகளையும் உடலளவிலும் மனதளவிலும் தருகிறது.

இது போன்ற சமுதாயத்தின் தண்டனைகளால் தன்னை ஒரு குழந்தைக்கு தாய் தந்தையராக்க அந்த தம்பதியினர் எவ்வித மருத்துவமும் செய்துக் கொள்ள தயாராகின்றனர்.

மனிதர்களின் பலவீனத்தை அறிந்தே பலவித வியாபாரங்கள் அவர்களை ஆட்டுவிக்கின்றது என்றாலும் சேவை மனப்பான்மையுடன் நடத்த வேண்டிய மருத்துவர்களும் மருத்துவமும் வியாபாரம் ஆகி பல காலங்காளாகி போனது வேதனைக்குரிய விசயம்.இதனை மையக் கருவாக கொண்டு வெளிந்த வந்த திரைப்படமே “குற்றம் 23“. இத்திரைப்படத்தில் பல கோணங்கள், கருத்துகள் உண்டு என்றாலும் குழந்தையின்மை பற்றி மையக் கருத்தாகக் கொண்டு வெளி வந்த இத்திரைப்படத்தை மேலோட்டமாக பார்த்தால்,

*சில வருடங்களாக குழந்தை இல்லாத ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து சென்ற குடும்பம் எவ்வாறு வலிகளை தருகிறது. அதனால் அப்பெண் அனுபவிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற பயம் 

*தன் பிள்ளைக்கே குறை இருந்தாலும் அதை உணராமல் ஆண் என்பதால் அடுத்த வாழ்க்கையை எளிதாக அமைத்துக் கொள்ளலாம், கொடுக்கலாம்

*குழந்தை அற்றவர்களை, அவர்களின் வலியை வேதனையை எவ்வாறு மருத்துவர்கள் வியாபார யுக்தியாக மாற்றுகின்றனர்

*"குழந்தை இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை" என்ற ரீதியில் மருத்துவம் வளர்ந்துவிட்டது.

*மருத்துவர்கள் நினைத்தால் யாரையும் யார் குழந்தையும் பெற்றுக் கொள்ள செய்யலாம். மருத்துவமனையின் பெயரை நிலைநாட்ட கணவன், மனையின் சொந்த உயிரணு மற்றும் கருமுட்டை என்ற பெயரில் மற்றவர்களின் உயிரணுக்களையும் கரு முட்டையையும் குழந்தை பெற்றுக் கொள்ள போகும் தம்பதியினரின் அனுமதியின்றி கர்பப்பையினுள் செலுத்தலாம்.

*கணவன் அல்லது மனைவியின் உண்மை உடல் குறையை தெரிவிக்காது மருத்துவர்களே சுய முடிவு எடுப்பதால் அப்பெண்ணுக்கோ கணவனுக்கோ ஏற்ப்படும் அவப் பெயர்.

போன்ற சாதாரண கருத்துகள் மட்டுமே ஒரு சாமானிய மக்களாக பார்க்கும்  நமக்கு புலன்படும் எனலாம்.

அதையும் மீறி சற்று உற்று நோக்கினால் பல வில்லங்கத்தை மறைமுகமாக சிலரின் மத்தியில் விதைப்பதே இப்படத்தின் நோக்கம் எனலாம். அதாவது பெண்ணியம் பேசிக் கொண்டும், மேலை நாட்டு கலாச்சாரங்களை சுமந்துக் கொண்டு தன் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய அந்நாட்டின் கலாச்சாரமோ, குடும்ப பாரம்பரியமோ எவ்வித தடையுமில்லை என்று அலையும் பெண்களுக்கு என்று கூறலாம். இவர்களின் மனதில் அத்திரைப்படம் விதைக்க முற்படும் தவறான விசயங்கள் என்னவெனில்,

*ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ள அவரது கணவரே அவசியமில்லை. அவரது அனுமதியும் தேவை இல்லை. ஏனெனில்,

*ஒரு பெண்ணின் கர்ப்பப்பை என்பது அவளுக்குரிய உரிமை, அவள் சொந்தம்.

*அவளுக்கு சொந்தமான ஒன்றில் யாருடைய குழந்தையை சுமக்க வேண்டும் என்ற உரிமை அவளுக்கு மட்டுமே உள்ளது. அது கல்யாணத்திற்கு முன்பா பின்பா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

*தனது கணவனின் குழந்தையையா அல்லது தான் விரும்பும் யாரோ ஒருவரின் குழந்தையையா அதாவது தனக்கு பிடித்த நடிகர், பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று யார் போல் தன் பிள்ளை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வாறே முடிவெடுத்துக் கொள்ளலாம். குழந்தையையும் பெற்றுக் கொள்ளலாம்.

*தங்களுக்கு பிடித்தவர்களை போல் தாங்களும் பிள்ளை பெற்றுக் கொள்ள மருத்துவம் எல்லா வகையிலும் கை கொடுக்கிறது.

*நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரின்  அணுக்களை, அவரது ஜீன்களை உங்கள் கருமுட்டையுடன் ஒன்றிணைய செய்து குழந்தையை உருவாக்க முடியும். அவர்களின் குணாதிசயங்களுடன் பிள்ளை பெற்று பிரபலாமக்க முடியும்.

என்பது போன்ற பல வில்லங்க செய்திளை மேற்சொன்ன சிலரின் மனதில் பதியச் செய்து ஒரு புரட்சியை உங்களால் செய்ய முடியும் என்ற சமூகத்துக்கு, நம் நாட்டு கலாச்சாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை விதைக்க முனைகிறார்கள்.

அதில் உள்ள நோக்கம் என்ன, வியாபாரம் என்ன என்பதை எல்லாம் சிந்திக்க மறுக்கும் போராளிகள் தான் இந்த புரட்சியை கண் மூடிச் செய்ய துணிகிறார்கள். காரணம் மருத்துவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, எதையும் அவர்களால் செய்ய முடியும் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையை தான் படித்த கல்வி தந்துவிட்டதாக அவர்கள் நம்புகின்றனர். தான் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானது, நேர்மையானது என்று தன்னைத்தானே முட்டாளாக்கி கொள்ளத் துடிக்கின்றனர். ஆனால் அதில் உள்ள சூழ்ச்சமதத்தை அவர்கள் கற்றுக் கொடுத்த கல்வி அவர்களுக்கு புரிய வைக்கவில்லை என்பதை சிந்திக்கவே மறுக்கின்றனர். 

நாம் தேர்ந்தெடுக்கும் பிரபலத்தின் அணுக்கள் தான் நமக்கு செலுத்தப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. பிள்ளையை பெற்ற பின்னும் அதனை நிருபீக்க பிரபலங்களிடம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து கண்டுபிடிக்கவும் வழியில்லை காரணம் மருத்துவர்களின் வியாபார யுக்திக்கு பிரபலங்கள் என்ற வார்த்தை பிரயோகம் மட்டுமே உங்களுக்கு கொடுக்கப்படும் பரிசாக இருக்குமே தவிர உங்கள் பேராசைக்கு அவர்களின் திருட்டுத்தனமே பதிலாக கிடைக்கும்.

இப்படத்தின் முக்கிய கதைக் கரு மேற்சொன்ன விசயங்கள் எனினும், ஒரு ஆண் நினைத்தால் எத்தனை பேருக்கும் மறைமுக கணவராகவும், நேரடி அப்பாவாகவும் மாற முடியும் என்ற மற்றொரு வில்லங்கம் தான் வில்லன் கேரக்டர். 

அதாவது தன்னால் ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ள விரும்பாத மனைவியை கொல்வதோடு, தான் விரும்பும் அல்லது விரும்பாத பெண்களுக்கு தன் உயிர் அணுக்களை அவர்களுக்கு தெரியாமலேயே செலுத்துவதும், தான் நினைத்தால் ஒரு கர்பப்பை என்ன? எத்தனை பெண்களின் கர்ப்பபையிலும் தன் குழந்தையை சுமக்க வைக்க முடியும் என்ற கேவலாமான கருத்தை விதைப்பதோடு, ஆண் என்றால் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கர்வத்தை, திமிரை ஆண்களின் மனதில் அச்சிலட முற்ப்படுகின்றனர்.

மேலும் மேற்சொன்ன பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் எல்லாம் தங்கள் உயிர் அணுக்களை இது போன்ற வியாபராத்திற்காக விற்பனை பொருட்களாக பயன்படுத்துகின்றனர் என்ற மறைமுக கருத்தும் இதில் உண்டு என்பதையும் மறக்க வேண்டாம்.

ஒரு திரைப்படம் என்பது என்ன நோக்கத்திற்காக வெளியிடுகிறோம், அதில் மக்களுக்கு என்ன கருத்தை விதைக்கிறோம் திரைப்படங்களை எடுப்பவர்களோ, அதை அனுமதிப்பவர்களோ சிந்திப்பதில்லை.

பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் சில திரைப்படங்களை காட்டிலும் இது போன்ற சமுதாயத்தை புரட்டிப்போடும், தீங்கு விளைவிக்கும் படங்களை எவ்வாறு திரைப்படத் துறையை சார்ந்த நிர்வாகிகள் அனுமதிக்கின்றனர் என்பது புரியவில்லை. பணம் என்றால் அவர்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கா??

தங்களது பொருளையும் நேரத்தையும் வீணடித்து திரைப்படங்களை காண செல்லும் பலருக்கும்  அத்திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் அதிர்ச்சிகரமான கருத்துகள் அபாயகரமானதாக இருப்பது வேதனைக்குரிய விஷயம். அதை அறியாமல் படங்களில் வருவதை போல் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படும் சிலரின் வாழ்க்கையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.


குழந்தையின்மை என்ற ஒன்றை இருவர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயமாகவும், இதில் மூன்றாம் நபர் அதாவது அவர்கள் இருவரை பெற்ற பெற்ரோர்களாகவே இருந்தாலும் தேவையற்ற பேச்சுக்கள் பேசி குத்திக் காட்ட உரிமை இல்லை என்பதை எப்போது உணர்கிறார்களோ அப்போது தான் இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த சமுதாயத்தில் இயல்பாக வாழ முடியும், தன்னை குற்றப்படுத்தி பேசுபவர்கள் முன்னிலையில் தன் தாய்மையை, ஆண்மையை நிருபீக்க மருத்துவ வியாபாரத்தில் அவர்களும் சிக்க முனைய மாட்டார்கள். அதனால் யாரென்ற தெரியாத மூன்றாம் நபரின் வாரிசை தனக்கே அறியாமல் தன் வாழ்க்கைக்குள் கருவறை மூலம் வரவேற்க மாட்டார்கள்.

இறைவனால் சாத்தியப் படக் கூடிய ஒன்றை மனிதர்களையும் அவர்களால் கொண்டு வரப்பட்ட கருவிகளையும் கண் மூடித்தனமாக நம்பி செல்லும் போது இது போன்ற அசாதாரண விளைவுகளை நாம் காண நேரிடுவது மருத்துவ உலகிற்கு இறைவன் விடும் சவால் எனலாம்.

உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன்

Wednesday, March 29, 2017

மனிதத்தை உணருங்கள்!!!

இறைவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!!!

எந்த தவறும் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவதும், அதற்காக அவர்கள் ஒதுக்கப்படுவதும் காலங்காலமாக சிலரால் சிலர் அனுபவித்து வருவது எங்கெங்கும் நம்மால் காண முடிகிறது. நாம் இந்தியாவில் வாழ்வில் இந்தியாவையே எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம்.

ஒருவர் எந்த வித குற்றமே செய்யாமல் அவர் தண்டனையா?? அனுபவிக்கிறார் என்றால் ஒன்று அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராகவோ அல்லது தலித் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஏனென்றால் இவர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், குற்றப்படுத்தலாம், அவர்கள் விரும்பியதை உண்பதை தடுக்கலாம் அதற்காக மிருகத்தை விட மோசமாக சித்திரவதை செய்யலாம் என்ற கோட்பாட்டை, வெறியை ஆதிக்க சக்தியினர் என்றென்றும் தங்கள் கொள்கையாக வைத்துள்ளனர். அதை புற்றுநோய் போல் எங்கெங்கும் பரப்பி வருகின்றனர்.

இவர்களின் கோட்பாட்டை இவர்களோடு நில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாமானிய மக்களிடமும், மற்றவர்கள் அறியாத அளவில் வலுக்கட்டாயமாக திணித்து உள்ளதும், அதனை சிந்திக்காமல் அதை அவர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.

இந்தியாவின் எல்லா பகுதியையும் விட தமிழகம் சாதி மதத்தை கடந்த ஒரு ஒற்றுமையை தனக்குள் வைத்திருக்கிறது என்றே இன்னும் நாம் நம்புகிறோம். நம்புவோம்.

கடந்த 2015-ஆம் ஆண்டின் ஏற்ப்பட்ட வெள்ளமும் அதில் இஸ்லாமியர்களின் அளப்பரிய தொண்டும், அற்பணிப்பும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியத்தை காக்க நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் என்று அனைத்திலும் தங்களை எவ்வித பாகுபாடுமின்றி முஸ்லிம்கள் தங்களை இணைத்துக் கொண்டது  உலகமெங்கும் தமிழகத்தின் மதம் கடந்த மனிதத்தை திரும்பி பார்க்க செய்தது. தமிழகத்திற்கு கிடைத்த கின்னஸ் சாதனையாக நாம் அகம் மகிழ்ந்தோம், ஒற்றுமையில் மாமன், மச்சானாக வாழும் எங்களை மிஞ்ச யாருமில்லை என்று ஆர்ப்பரித்தோம்..

ஆனால் அந்த ஒற்றுமை, மனிதம், மாமன் மச்சான் உறவு எல்லாம் பிரச்சினைகள் வரும் போது கை கொடுக்கும் நேரத்திலும், அதில் தங்களை எவ்வித எதிர்ப்பார்ப்பும், சுய நலமின்றி தங்கள் உடல், பொருள் ஆவிக் கொண்டு இணைத்துக் கொள்ளும் போது மட்டும்தானா???

ஏன் இல்லை, எல்லா நேரத்திலும் நாங்கள் அப்படித்தான் என்று சொல்ல ஒரு சிலர், ஆம் ஒரு சிலர் மட்டுமே காத்திருப்பதாக தோன்றுகிறது. காரணம் இன்று தமிழகத்தின் சென்னை போன்ற பல இடங்களில் ஒரு முஸ்லிம் வீடு கேட்டால் மறுக்கப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது. உண்மை தான், ஏற்கனவே நண்பர்கள் சொல்லும்போது வருத்தப்பட்ட போதும் நம்பாத மனம் இப்போது நம்பவே செய்கிறது.

முஸ்லிம்கள் என்றால் தீண்டதகாதவர்கள் போல் ஏதேனும் வாய்ப்புகளிலாவது ஒதுக்கி வைப்பது கூனி குறுகச் செய்கின்றது. உண்மையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களின் அற்பணிப்பை, தியாகத்தை அவர்களின் உண்மை முகம் இது தான் என்று பாராட்டி பல பதிவுகள் போட்ட சமூக ஆர்வலர்களும், முகநூல் போராளிகளில் ஒருவராகவும் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். 

தன் பெயரை தவிர தன்னை எவ்விதத்திலும் முஸ்லிமாக காட்டிக் கொள்ளாத, ஏன் முஸ்லிம்களை பல விதத்தில் எதிர்க்க கூடியவர்களில் ஒருவரான ஹமீத் என்கின்ற மனுஷ்ய புத்திரனுக்கே இந்நிலை தான். அவரின் காரசாரமான சில நடுநிலையான பதிவுகளுக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்த பல பேர், முஸ்லிம்களை தங்களுக்கு எதிரியாக சித்தரித்துக் கொண்டவர்களே. ஏனெனில் அவரை முஸ்லிம்களின் எதிரியாக கண்டனர். ஒத்துழைப்பை நல்கினர்.

அப்போதெல்லாம் மார்தட்டிக் கொண்ட “மனுஷ்ய புத்திரனுக்கே” இன்று வீடு கொடுக்க சிந்திக்கின்றனர், அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். காரணம் அவர் பெயர். தனக்கும், தன்  கருத்திற்கும் வலு சேர்க்கும் பலரது பின்னூட்டங்கள் எல்லாம் தன்னை மாமன் மச்சானாக பார்க்கும் மாற்று மத நண்பர்களே என்று எண்ணி பெருமைக் கொண்ட அவருக்கு தான் இந்நிலை. (பார்க்க படம்)

உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஒரு முஸ்லிமின் துணையுடன் நீங்கள் குடியிருந்தால் உங்கள் உயிரும் உடமையும் முன்பு எப்போதும் சிந்திக்காதப்படி பாதுகாப்பாக பத்திரமாக இருக்கும் என்பதை எப்போது உணர போகிறீர்கள்.

இன்று சென்னை, நாளை தமிழகத்தின் எல்லா பகுதியிலும்ம் இந்நிலை வராது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை, தங்கள் திட்டத்தின் அடிப்படையை திணித்து விட்டதாக சத்தமின்றி சிரித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியினரின் அலுச்சாட்டியத்தை எப்போது உணர போகிறீர்கள்.
நீங்கள் செத்தால் அவர்களுக்கு வாழ்வு என்றால் உங்களை பலியிடவும் தயங்க மாட்டார்கள் என்ற கோர முகத்தை எப்போது உணர போகிறீர்கள்??? 

எல்லாரையும் குற்றப்படுத்தி விட முடியாது என்பது எல்லா விசயத்திலும் விதிவிலக்கு என்றாலும், ஒரு சிலரும் குற்றப்படுத்தப்படாத நிலை எப்போதும் வரும் என்ற ஆதங்கமே இப்பதிவின் நோக்கம்.

மனிதன் மறதிக்காரன் என்பதற்காக சுயநலமற்ற எங்கள் உள்ளங்களை மீண்டும் மீண்டும் நிருபீக்க இயற்கையை தான் அப்பப்போ பேரிடர் விளைவிக்க கேட்டிட முடியுமா, போராட்டங்களை தேடி ஓடி ஓடி எங்கள் வாழ்வின் போராட்டத்தின் முடிவை தேட முடியுமா??

எப்போது மாறும் இந்நிலை, வாயால் மட்டும் மாமன், மச்சான் என்று நடித்து கொண்டிருக்கும், தன் தேவைக்காக அருகில் வைத்துக் கொண்டிருக்கும் சுயநலவாதிகளின் கூட்டம் எல்லா இடத்திலும், எல்லா சமயங்களிலும் இருக்கவே செய்கின்றனர்.

உங்கள் கற்பனையின் பாத்திரத்திற்கு இன்று வரை பலியாகி வரும் முஸ்லிம்களின் உண்மையான நற்குணத்தை எப்போது ஏற்றுக் கொள்ள போகிறீர்கள்??? எப்போது புரிந்துக் கொள்ள போகிறீர்கள்???

எல்லா வகையினரின் பண்டிகைக்கும் பண்டங்களை மட்டும் பரிமாறி, உள்ளத்தின் எதோ ஒரு இடுக்கில் வெறியை வளர்த்து கொள்வது, முழுக்க இனிப்பு நிறைந்த பானத்தில் துளி விஷம் கலப்பதற்கு சமம்.

இஸ்லாமும் உண்மையான முஸ்லிமாக வாழ்பவர்களும் மனதளவிலும் யாருக்கும் இடையூறு செய்ய மாட்டார்கள் என்பதை நம்புங்கள். போலி பெயரில் உலா வந்து கலவரத்தை கைக் கொண்டு, நமக்குள் பிரிவினையூட்டும் வெறியர்களை அடையாளங் காணுங்கள். நம் உணரும் போலியற்ற மாமன் மச்சான் உறவை நம் வருங்கால சந்ததியினருக்கும் சுவைக்கத் தாருங்கள். 

செய்தி ஆதாரம்: https://goo.gl/mN3Wbu 

உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன் 

Wednesday, February 3, 2016

கல்வியா (ஆ???)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஒருவரை பண்படுத்தக் கூடிய கல்வி என்பது இன்று எட்டாக்கனியாக மாறி வருகிறது என்றால் மிகையாகாது. கல்வி என்றாலே மார்க்கட்டுகளில் கிடைக்கக் கூடிய விலை உயர்ந்த பொருட்களில் ஒன்று போல் ஆகி வருகிறது.

“கல்வி” என்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைப்பை பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவரும் எடுத்தாளும் தலைப்பாக இருக்கிறது, இதை பற்றி அவர்கள் மனதில் தோன்றியதை கட்டுரைகளாக, பட்டிமன்றமாக, குறும்படமாக இயக்கி இந்த சமூகத்தில் உலாவர செய்துள்ளனர். அப்படி செய்தும் ஏன் அது இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை, ஏன் என்று சற்றே சிந்திப்போமாக!!!

கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஒரு சான்று..

நபி ஸல் அவர்களுடன் தங்கியிருந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை காண விரும்பிய போது, நபி ஸல் அந்த இளைஞர்களுக்கு விதித்த முதல் கட்டளை,

'நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுங்கள். 
அறிவிப்பவர்: அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) - ஸஹீஹ் புகாரி: 6008

அன்று முதல் இன்று வரை அறிவியல் வளர்ச்சி என்பது உயர்ந்தே செல்கிறது, இந்த வளர்ச்சியை எற்படுத்த தேவை என்பது கல்வியா? செல்வமா? என்று உங்களை கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஆனால் நான் கல்விதான் என்று சொல்வேன். அப்படியானால் அறிவியலோடு கல்வியும் வளர்ந்து தானே செல்லவேண்டும்,  ஆனால் மாறாக கல்வியின் தரம் குறைந்தே செல்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே சென்றால் இந்த கல்வி அழிந்து விடும் அபாயம் ஏற்ப்பட்டாலும்  ஆச்சர்யப் படுவதற்கில்லை.

இந்த அறிவியலால் மனிதவளமோ அல்லது மனிதனுக்கு வளமோ கூடுனால், அவன் இந்த கல்வியின் வளத்தை உயர்த்துவான், அவ்வாறு செய்யவில்லை என்றாலும் அதற்காக அவன் பாடுபடுவான். இன்றைய அறிவியலால் மனிதன் அழிந்து போகிறான். அதனால் தான் கல்வியும் அழிந்து போகிறது.

நமது மறைந்த முன்னால் குடியரசு தலைவர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள், இந்த உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் எப்படி? அவர்கள் “கல்வி கற்பது அறிவை பெருக்குவதற்கும், அதனைக்கொண்டு மனிதவளத்தையும், மனிதனுக்கு வளத்தையும் பெருக்க வேண்டும்” என்று நினைத்தார்கள். அவ்வாறு வாழ்ந்தமையால் அவர்கள் இந்த உலகை பொருளாதாரத்திற்காக சுற்ற வில்லை, மாறாக அவர்களை இந்த உலகமே சுற்றிவந்தது.

அன்று நம் நாட்டில் இருந்த தலைவர்கள், மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும், அவர்கள் அறிவின்மை நீங்கி அறிவுள்ள மனிதர்களாக வாழவேண்டும் என்று தன்னுடைய பொருளாதாரத்தையே தானம் செய்தவர்கள். தற்போது உள்ள  நிலை என்னவென்றால் பொருளாதாரத்திற்கு தான் கல்வி. இன்று உள்ள அனேக மக்களின் சிந்தனையும், கல்வி கற்று, அதிக சம்பளத்தில் பணியில் அமர்ந்து  சுகபோக வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைக்கு மாறிவிட்டனர். இந்த மாற்றத்தை கண்ட பண முதலைகள் இந்த கல்வியை பொருளாதாரத்திற்கு, விற்கும் கொள்கைக்கு மாறிவிட்டனர். 

இது போன்ற சில பண முதலைகள் விற்ற இந்த கல்வியை கற்றுக்கொண்டு, இல்லை இல்லை வாங்கிக்கொண்டு அதை வைத்து பணத்தை சம்பாரிக்க வேண்டும் என்று அகன்ற இந்த பூமியில் அங்கும் இங்குமாக நாம் ஓடும் ஓட்டம், இந்த பூமி சுற்றும் வேகத்தை விட பலமடங்கு அதிகமாக உள்ளது.

இதில் எவ்விலை கொடுத்தேனும் வெற்றி பெறும் மேல் வர்க்க மக்களுக்கு முன் கூனி குறுகி இந்த போட்டியில் தோற்று போவது கீழ் வர்க்க மக்களே. இப்போட்டியில் அவர்கள் மரணித்தும் விடுகின்றனர். 

அந்த சமபவத்தில் ஒன்று தான் தற்போது விழுப்புரத்தில், சித்த மருத்துவக்கல்லூரியில் நடந்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மாணவிகளின் மரணம்.

பெற்றோர்களும் காரணம்:

இந்த நிலைக்கு முதல் காரணம் நம்மை போன்றவர்கள் தான். காரணம் அனைத்து பெற்றோரும் தங்களின் பிள்ளைச் செல்வங்களை, நன்கு படிக்க வைத்து, கை நிறைய பணம் சம்பாதித்து, சுகபோக, ஒரு செல்வந்தர் வாழ்க்கை வாழவேண்டும் என்று மட்டும் தான் நினைக்கின்றீகள். யாரேனும் தன்னுடைய பிள்ளைகள் நன்கு கல்வி கற்று, தனக்கு பின் வரும் இந்த சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கின்றோமா??. பின்பு எப்படி கல்வியால் இந்த சமூகம் சிறக்கும், மாறாக சீர் குலைந்து தான் போகும்.

கல்வி ஒரு வியாபாரம்:

இந்த நிலைக்கு இரண்டாவது காரணம் செல்வந்தர்கள், பணத்தாசை பிடித்த இந்த மிருகங்கள், தன்னுடைய பசிக்கு உணவாக பணத்தை மட்டும் உண்டால் பரவாக இல்லை, அதற்கு பதிலாக கீழ் வர்க்க மக்களின் உயிரையும் சேர்த்து தான் உண்ணுகின்றனர்.

இன்று வரை நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை கணக்கெடுத்தால் பல ஆயிரத்துக்கு மேல் போகும். இந்த கல்வி நிறுவனர்கள் யாரேனும் ஏழ்மை நிலையில் உள்ளனர்களா?? என்று பார்த்தோமேயானால், யாரும் அப்படி இல்லை. மற்றொரு கோணத்தில் இருந்து பார்ப்போம்மேயானால் அவர்கள் பிடுங்கும் கட்டணத்திற்கு ஏற்றாற்போல் தரமான கல்வியையாவது கொடுக்கிறார்களா?? என்றால் இல்லவே இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் அவர்களின் செல்வங்கள் தான் ஏற்றம் அடைகிறது. இந்த கீழ் வர்க்க மக்களின் செல்வங்கள் குறைந்து கொண்டே செல்கிறது, அதன் பின்பு தன்னிடம் இருந்து குறைந்த செல்வத்தை மீட்டெடுக்க அந்த மக்கள் மிகுந்த போராட்டத்தை எதிர் நோக்கி பயணிக்கின்றார்கள், அதிலும் தோற்கும் நிலைமை வரும்போது, இந்த சமூக நலனிற்கு எதிராக மாறுகின்றனர். இதற்கு அவர்களை  நாம்  குற்றம்  சொல்ல முடியாது.

அரசாங்கம்:

இதில் மூன்றாவது காரணியாக இருப்பது அரசுதான். எந்த கோணத்திலும் இருந்து பார்த்தாலும் இந்த அரசாங்கம்தான் குற்றவாளியாக இருக்கிறது. இந்த குற்றங்களை தடுத்து களையவேண்டிய பொறுப்பு அரசிற்கு உண்டு, ஆனால் அரசாங்கம் குற்றம் செய்பவர்களுக்கு துணையாக நிற்கிறது, கண்டுகொள்வதில்லை. குற்றம் செய்பவர்களை விட அந்த குற்றங்களை செய்ய பக்க பலமாக இருந்து அவர்களை காத்து நிற்பவர்களே முதல் குற்றவாளிகள். அரசாங்கத்திற்கு ஏன் இந்த அவல நிலை?? ஏன் என்று பார்த்தால் அப்படிப்பட்ட அதிகாரம் நிறைந்த பணிகளில்,  ஊழலில்  ஊறித் திளைத்த சில  அரசியல்வாதிகளும், மேல் வர்க்க மக்களுமே நிலைத்து நிற்கின்றனர்.

அரசாங்க வேலைகளில் உள்ளவர்களும், அரசாங்க ஆசிரியராக பணி புரிபவர்களும் தங்களின் பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்கின்றனர். அடிப்படை வசதி வாய்ப்புக் கூட இல்லாத அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சேர்ப்பதில்லை, அப்படி சேர்த்தாலும் அடிப்படை வசதியற்ற பள்ளிகளில் படிக்க பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதும் இல்லை. இருப்பினும் ஏழ்மையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை அரசு கல்வி நிறுவனத்திற்கு அனுப்பும் பெறோர்கள் மற்றும் பிள்ளைகளின் நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும்மா? இதிலும் ஒரு மாணவிக்கு அநீதி, கொடுமை நிகழ்ந்துள்ளது. 

ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..!

திருச்சி துறையூரில் ஒரு அரசுப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் பயின்று வரும் மாணவி கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிபபெண் வாங்க வேண்டும் என்று இரவு பகலாக படித்து தேர்வு எழுதினார். ஆனால் தேர்வு முடிவை பார்த்ததும் அதிர்ந்து போனார், தேர்வில் அவர் எடுத்த மதிப்பெண்கள், தமிழ்-93, ஆங்கிலம்-75, கணிதம்-73, அறிவியல்-2, சமூக அறிவியல்-100. அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி அறிவியலில் மட்டும் 2 மதிப்பெண் எப்படி எடுக்க சாத்தியம் என்று பார்த்தால், அரசு  அதிகாரிகளின் அலட்சிய போக்கும், தங்களின் குற்றத்தை ஒப்புக் கொள்ளாமையுமே. விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய முனைந்த மாணவிக்கு எந்த பதிலும் இல்லை, அதனையும் கேட்க சென்றவருக்கு மிரட்டல், தான் உடல்நிலை சரியில்லாததால்  எடுத்துக் கொண்ட  மாத்திரையின்  வீரியம் என்னை பரீட்சையை எழுத விடவில்லை, சுய நினைவற்று இருந்தேன் என்று ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டு தர மிரட்டியுள்ளனர்.

வசதியற்ற அந்த பெண்ணும் போராட தெம்பில்லாமல் அவ்வாறே செய்துள்ளார். மீண்டும் மறு தேர்வு எழுதி அவர் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா??? 93 . என்ன மதிப்பெண் எடுத்தும் என்ன பயன், அவர் தோல்வியுற்று வெற்றி பெற்றவர் என்ற கரும்புள்ளியை யாரால் போக்க முடியும்

ரோஹித், சரண்யா, பிரியங்கா, மோனிஷா மரணத்தை தொடர்ந்து நாடெங்கும் பல மரணங்களும், அநியாயங்களும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இரண்டு நாட்கள் அதைப் பற்றி சிந்தித்து அதைக் கடந்து அடுத்த வேலையை பார்ப்பதே இன்று நம்மில் பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு. ஒரு சமுதாயத்தை திருத்த நம்மில் இருந்தே முயற்சியை தொடங்க வேண்டும் என்பதை நம்மில் அனைவரும் மறக்கின்றோம், மறுக்கின்றோம்.
மனித இனத்தை பண்படுத்த கூடிய இந்த கல்வி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், நாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசையும், ஜாதி பேதம் அற்ற கல்வி நிறுவனங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். உயர் அதிகாரத்தில் உள்ளவர்களால் மட்டுமே தனக்கு கீழ் நடக்கும் குற்றங்களை களைந்து அவற்றை சீர் செய்ய முடியும். மக்களே, நீங்கள் சிந்தித்து செயல்பட இதுவே சரியான தருணம்.

உங்கள் சகோதரன்,
ரியாஸ்தீன் யாஸ்மின்
Monday, January 25, 2016

வீட்ல யாரும் இல்லைங்கோ!!!

எல்லாம்  வல்ல  அல்லாஹ்வின்  திருப்பெயரால் ...

முன்பெல்லாம் நம்  வீட்ல  நடக்கும்  சில  பல  விசயங்களை  நம்  கூட  படிக்கும், வேலை  பார்க்கும் இடத்தில், ஃபிரண்ட்ஸ்கிட்ட என்று நமக்கு நெருங்கியவர்களிடம் சேர்  பண்ணி  சிரிப்போம், கவலைப்படுவோம்.. இப்போ  டெக்னாலஜி வளர்ந்துட்டதாலயோ என்னவோ  நம்  அருகில் இருக்கும்  தாய், தந்தை, கணவன், பிள்ளைங்ககிட்ட  பேசுவதும், அன்றாடம்  நடக்கும் விசயங்களை  அவர்களிடம் சேர்  பண்ணுவதும் குறைஞ்சு  போய்  ஃபேஸ்புக், டவீட்டர்னு ஸ்டேடஸ் போட்டு தனியாக புலம்புவதை  நம் மக்கள்  ட்ரன்ட்டா வச்சு  இருக்காங்க..

சரி  பொதுவான  விசயங்களை, கருத்துக்களை  பகிர்வதால் ஒன்னும்  பிரச்சினை  வரப் போவது இல்லை. ஆனா நம் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கின்ற, பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவையான,  சொல்லக் கூடாத,  பகிரக் கூடாத  விஷயங்கள்னு சிலவையும் இருக்குல்ல..

சில மனைவிமார்கள்  என்ன  செய்றாங்கன்னு  பாத்தா, அப்பாடா  சூரியன் முழிக்கும் முன்னே  முழிச்சேங்க, இப்போ தான்  ரிலாக்ஸ்  ஆகுறேன்.. மாமியார், மாமானார் வெளிய போய்ட்டாங்க, கணவர் ஆபிஸ் போயிட்டார், பிள்ளைங்க ஸ்கூல் போய்ட்டாங்க.. ஒருவழியா எல்லாரையும் பேக்அப் பண்ணிட்டு  இப்போ தான்  தனியா நான்  மட்டும் வீட்ல  ரிலாக்ஸ்ஆ இருக்கேன்.. என்ன  ஒரு ஆனந்தம்னு அவங்களே  வாக்குமூலம்  கொடுக்குறாங்க.. அதுவும்  எங்க  ஃபேஸ்புக், டவீட்டர்ல..

சரி கல்யாணம் ஆன மனைவிமார்கள் தான் அப்படின்னா கணவன்கள் மட்டும் என்ன சும்மாவா.. மனைவி வேலைக்கு போய்ட்டா.. பசங்க ஸ்கூல் போய்ட்டாங்க.. நான்  எனக்கு உடம்பு சரியில்லைன்னு ஆபிஸ்க்கு லீவு போட்டுட்டு வீட்ல கொஞ்சம் தனியா  ஃபேஸ்புக்ல நிம்மதியா  ரெஸ்ட் எடுக்கறேங்க என்று ஒரு ஸ்டேடஸ் போடுவார். இத அவர் கம்பெனி ஓனரோ, மேனஜரோ பாத்தா “சிக் லீவ்”-வுனு சொல்லிட்டு ஃபேஸ்புக்லயா கிடைக்குற என்று வேலைக்கே  ஆப்புதான்.

இதே போல் காலேஜ், ஸ்கூல் படிக்கும் ஆண்களும் பெண்களும் பலவித நேரங்களில் தங்கள் தனிமையை ஸ்டேடஸாக போட்டும், தங்களது புகைப்படங்களை விதவிதமாக சேர் செய்தும் நிம்மதி அடைவதாக எண்ணி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

சரி  இவைகள்  மட்டுமானு  பாத்தா  வாங்குற ட்ரெஸ், நகைகள் முதல் கிச்சனுக்கு வாங்கும் சாமான் வரை அனைத்தும் போட்டோவாக. அத வச்சே  அவங்க சொத்து கணக்க குத்துமதிப்பா  கண்டுபிடிச்சிடலாம்,  நாம  எப்படி  பணக்காரன்  ஆகலாம் என்று  திருடர்கள் கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த இடத்தில் ஒரு படத்தின் காமெடி தான் நினைவுக்கு வருது..

“ஒரு வாரம் ஊருக்கு  போறோம், வீட்டை பாத்துக்கோங்கன்னு போலிஸ் ஸ்டேசனில் லட்டர் கொடுத்துட்டு போவார் ஒருவர், அவர் ஊரில் இருந்து வந்து பாத்தா மொத்த வீடும் காலியாக இருக்கும், வீட்டின் சொந்தக்காரர் நேரா போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து, “உங்களிடம் தானே வீட்டை பாத்துக்க சொன்னேன், நீங்களே திருடனா இருப்பீங்கன்னு நினைக்கல” என்று சண்டை போட இறுதியில் வீட்டிற்கு சென்று பார்த்தால் கதவில் அவர் ஸ்டேசனில் கொடுத்த லட்டரும் அதில் “தகவலுக்கு நன்னி” என்று எழுதப்பட்டிருக்கும்.  மேட்டர் என்னன்னா அவர் ஊருக்கு போறோம்னு தகவல் கொடுக்கும் நேரத்தில் ஸ்டேசனில் திருடனாக அமர்ந்திருக்கும் ஒருவன் நோட்டம் விட்டு திருடி விடுவான். இறுதியில் நன்றிக்கு பதில் நன்னி என்று சொல்லக் கூடிய அந்த வார்த்தையை வைத்து திருடன் பிடிபடுவான்.”

இன்று இந்தக் கதையா தான் இருக்கிறது சமூக வலைத்தளைங்களில் மக்களின் நிலவரமும்.

இப்படி நம் நிலைமையை வெளிப்படுத்துகிறோமே!!! இதெல்லாம் தேவை தானா??? இதனால் பிரச்சினை  எதுவும் வருமான்னு நாம்  சிந்தித்தது உண்டா!!!.

நிம்மதியை மற்றவர்களுக்கு  தெரிவிப்பதாக  எண்ணி, தனது  தனிமை  நிலையை பல திருடர்களுக்கும், கள்வர்களுக்கும் வெளிச்சம்  போட்டுக் காட்டுகிறோம்  என்பதை  மறக்கின்றோம் நம்மில் பலர்.

இப்போது  எல்லாம்  திருட  நினைக்கும்  திருடர்களுக்கு வீட்டை  உளவு பார்க்க உளவாளியோ, யாரும்  வராம  பாத்துக்கோன்னு  சொல்லி  கேட்டில் நிற்க வைக்க காவலாளியோ  தேவை  இல்லை.

ஒரு  கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் அக்கவுன்ட்  இருந்தாலே  போதும். தனக்கு தேவையான  தகவல்களை சொகுசாக இருந்த இடத்திலேயே பெற்று விடலாம் பலரின் ஸ்டேடஸ் மூலம்.

நண்பர்கள் என்ற போர்வையில் பல நாள் பேசி பழகி வீட்டு முகவரி, தொலைபேசி எண் என்று தனக்கு தேவையான அனைத்து தகவல்களையும் சேமித்து, தக்க சூழலில் நமது சொந்த வாக்கு மூலத்தின் மூலமே  திருடர்களை வரவேற்கின்றோம் நம்மில் பலர். (இதுக்கு பேர்  தான்  சொந்த  காசில் சூனியமோ J ).இன்னும் பலர்  நெருங்கி பழகி பல  இளம் பெண்களை/ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை, பணம், கற்பு என்று சூறையாடப்படுகிறது. மேலும் ஏமாற்றத்தில் தொடங்கி உயிரையே எடுக்கும் படுபயங்கரமான குற்றம் வரைக்கும் செல்கிறது இந்த சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பு.ஆனால் ஆபத்து நிறைந்த இதே சமூக வலைத்தளம் தான் சென்னை வெள்ளத்தால் சூழப்பட்டு தவித்த நேரத்திலும், பல நற்காரியங்களுக்கும் சரியான வகையில் பயன்படுத்தப்பட்டு உரிய நேரத்தில் உரியவருக்கு தேவையான உதவியை பெற்று தந்தது. பல உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது, மக்களிடம் பரவச் செய்கிறது.

சமூக வலைத்தளைங்களை பயன்படுத்துவதில் தப்பில்லை, அதில் நண்பர்கள் மட்டும் தான் பார்ப்பார்கள் என்று நம்பி பல நம்பிக்கையான விசயங்களை பகிரும் முன் சற்று சிந்தியுங்கள்.  நட்பு என்ற போர்வையில் நம்மை சுற்றி பல வில்லன்கள் தான் நம்மிடம் நெருக்கத்தில் உள்ளார்கள் என்ற சந்தேகக் கண்ணோடு எப்பொழுது ஒரு படி விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.

எந்த ஒரு விசயத்தையும் நாம் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அது நன்மையா தீமையா என்று உணர முடியும். 

கத்தியை வைத்து பழத்தையும் நறுக்கலாம், மனிதனின் உயிரையும் எடுக்கலாம். பயன்படுத்தும் விதமே முக்கியம்!!!

உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன்