உயிர் கொல்லும் வட்டிக்கு தடை – அன்றே விதித்தது இஸ்லாம்


கடந்த இரண்டு தினங்களாக பரப்பராக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம், பலரின் தூக்கத்தை பறித்த ஒரு விசயம், ஏன் பலரின் மனிதாபிமானத்தை அடி ஆழம் வரை சென்று உலுக்கிய விசயம் என்னவெனில், நெல்லையில் ஒரு குடும்பமே எரிந்து சாம்பலானது பற்றியே..

கந்துவட்டி கொடுமையால், அசலுக்கு மேல் வட்டி செலுத்தியும் தனது கடனில் இருந்து மீள முடியாமல் பலத்த அவமானங்களுக்கு பிறகு, பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்பும் தீர்வு வராத பட்சத்தில், தீர்வுக்காக போராடிய அதே கலெக்டர் அலுவலகம் முன்பு கிட்டத்தட்ட ஒன்று முதல் இரண்டு வயதே ஆனா பச்சிளம் பாலகன், ஐந்து வயது மகள், மனைவி என்று தனது குடும்பத்திற்கு தானே தீ வைத்து எரித்து, எரித்துக் கொண்ட சம்பவம் பார்ப்பவரையும், கேட்பவரையும் இன்று தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது.

ஒருவருக்கு பொருளாதாரம் என்பது அத்தியாவசியமானதே, தனது தேவைக்கேற்ற வருமானம் இல்லை எனும்போது விரும்பியே விரும்பாமலோ கடன் படும் சூழலுக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகின்றனர். ஆனால் வாழ்வதற்காக வாங்கும் கடன் நம் உயிரையே மாய்க்கும் என்று ஒருவரும் தெரிந்தே வாங்குவதில்லை. அதிலும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கபடுவது வட்டிக்கு வாங்கும் கடனால் தான்.

இதற்காகத் தான் இஸ்லாம் தடை செய்த மிகப் பெரும் பாவமான விசயங்களில் ஒன்று வட்டிக்கு வாங்குவதும், கொடுப்பதுமாகும். வட்டி என்பது எவ்வளவு கொடூரமான ஒன்று இறைவன் அறிந்ததாலேயே அதை தடை செய்துள்ளான். அதனை ஒரு பாவச் செயலாகவும் வகுத்துள்ளான்.

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள் (அல் குர்ஆன் 2:275)



வட்டியை வாங்குபவர்களுக்கு எந்த அளவு கண்டிப்பும், தடையும் உள்ளதோ அதே போல் தான் வட்டியைக் கொடுக்க ஒப்புக்கொண்டு கடன் வாங்குபவர்களுக்கும் இறைவன் தெளிவு படுத்தியுள்ளான், வட்டியினால் எவ்வித பரக்கத்து(நன்மை)ம் இருக்காது, அது தங்கள் வாழ்வை அழித்து விடும் என்று தெளிவுப் படுத்துகிறான்.

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல் குர்-ஆன் 2:276)

இறைவன் அருளிய வசனங்களின் பொருளையும், அதன் விளைவையும் நாம் கண்கூடாகவே பார்க்கிறோம், நம்மில் பலர் அனுபவித்தும் வருகிறோம்.
வட்டியில்லாமல் யார் கடன் தருகிறார்கள், எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் தான் வட்டியில் விழுகிறோம் என்று பலர் கூறும் உளக்குமுறல்கள் புரிந்தாலும், உண்மையில் உங்களின் எண்ணம் இறைவன் தடை விதித்த ஒன்றில் நாம் ஈடுபடவேக் கூடாது என்றும், அதற்கான எண்ணமே நம்மிடம் இல்லையென்றால் இறைவனின் உதவி நீங்கள் எதிர்பாராத திசையில் வருவதை உங்களால் உணர முடியும்.

இது போன்ற மக்களை காக்கவே இஸ்லாத்தில் இறைவன் ஜக்காத் என்ற ஒரு சட்டத்தை அருளினான், அந்த ஜக்காத் என்ற தான தர்மங்களை யாருக்கு வழங்கலாம் என்ற எட்டு வகை பட்டியலில் கடனாளிகளும் ஒருவராவர். ஜக்காத் வழங்கக் கூடிய நிலையில் உள்ளவர்கள், இது போன்ற கடனில் சிக்கித் தவிப்பவர்களை காத்தருள்வதற்காகவும், அதன் விளைவுகளில் இருந்து பாதுகாக்கவுமேயாகும், கடனின் வீரியமும் அதனால் ஏற்ப்படும் விளைவுகளை இறைவன் அறிந்ததாலேயே வட்டியை தடை செய்து ஜக்காத்தை சட்டமாக்கி அதனை கடனாளிகளுக்கு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளான்.

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)



மேலும் உங்களிடம் ஒருவர் கடன் வாங்கி அதனை சொல்லிய நேரத்தில் திரும்ப செலுத்த இயலாத சூழல் வருமாயின் பொறுமை காத்தல் என்பது உகந்த நற்குணம். உங்களின் தேவைக்காக அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் போது அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர், வேறு ஒரு இடத்தில் வட்டிக்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர், அதற்கு பதில் கடன் பட்டவரிடம் பொறுமை கொண்டு உங்கள் தேவையை இறைவனிடத்தில் பூர்த்தி செய்ய மன்றாடும் போது, உங்கள் தேவை எளிதில் பூர்த்தி அடைய இறைவன் வழி செய்கின்றான்.

ஒருவர் மற்றவரிடம் கடன் பட்டால் அவர்களிடம் அழகிய முறையில் அதனை திருப்பிக் கேட்பவருக்கும், அவரின் சூழல் அறிந்து கால அவகாசமும், திரும்ப செலுத்த சக்தியற்றவர்களுக்கு தள்ளுப்படி கொடுப்பவருக்கும் அவர்கள்  அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு இறைவன் மன்னிப்பை பரிசாக வழங்குகின்றான். அதற்கு உதாரணம் தான் கீழ்க்கண்ட ஹதீஸின் சம்பவம்.

ஒரு மனிதர் மரணித்து அடக்கப்பட்டார். 'நீ என்ன நன்மையை சொல்லி (செய்து) விட்டு வந்தாய்?' என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கள் செய்து வந்தேன். மக்களிடம் கடன் தொகையை வசூல் செய்யும் விஷயத்தில் வசதியுள்ளவர்களுக்கு அவகாசமும், வசதியற்றவர்களின் கடனை மன்னித்து (தள்ளுபடி) செய்தும் வந்தேன்' என்றார். இறைவன் அவரை மன்னித்தான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.  (அறிவிப்பவர்: ஹூதைஃபா(ரலி) புகாரி 2391)

ஆனால் இன்றையோ சூழலோ, நம் தேவை போக மீதியை சேகரித்து வைக்கும் சக்தி பெற்றவராக இருப்பினும், ஒருவர் அவசரத்திற்கு கடன் கேட்டு நம்மை அணுகினால், எங்கே திரும்ப அந்த பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்திலும், நமது சேமிப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டால் நமது தேவைக்கு யார் தருவார் என்ற சிந்தனையும் கடன் தர மறுக்கிறது. இதனால் அவர் வட்டிக்கு கடன் வாங்கும் சூழலும், அதனால் அவரும் அவரது குடும்பமும் அடையும் வலிகள், அவமானத்திற்கு நாமும் ஒரு காரணமாகி விடுகிறோம் என்பதை மறக்கச் செய்கிறோம்.

உண்மையில் உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் எங்கே இருந்து வர வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிப்பது நீங்கள் அல்ல, மாறாக இறைவன் ஒருவனே என்பதை புரிந்தாலே மேற்சொன்ன சிந்தனைகள் நம்மை அணுகாது.
உங்களிடம் கடன் பட்டவரின் நிலை உண்மையாகவே திரும்ப செலுத்த இயலாத நிலை என்று நீங்கள் தெரிந்துக் கொண்டால், இறைவன் உங்களுக்கும் அருளும் மகத்தான மன்னிப்பை எண்ணி அதை தள்ளுப்படி செய்து விடுவீர்களாயின் நீங்கள் எதிராபாராத பலனை ஈருலகிலும் அடைவீர்கள் என்பதை மறவ வேண்டாம்.

தான் வியாபாரம் செய்ய எண்ணிய ஒரு பெண்ணிற்கு, அரசு கஜானாவில் இருந்து கடன் வழங்கி உதவிய உமர் ரலி அவர்கள் போன்ற ஆட்சியாளர்களையும் சட்டங்களையும் கொண்டது இஸ்லாம். ஆனால் இன்றுள்ள அரசாங்கம், மக்களின் உயிரைக் குடிக்கும் திட்டங்களையும், ஆட்களையும் அனுமதித்து, தங்கள் சொந்த கஜானாவின் சிறுகுறு இடங்களையும் காற்று புக கூட வழியில்லாமல் நிரப்பி வருகிறது. அதன் விளைவே, பொறுப்பில் உள்ள ஒரு அரசு அதிகாரி சரியான நடவடிக்கை எடுக்காமல் விட்டதின் மேம்போக்கு தனத்தால் இன்று ஒரு குடும்பமே தீயில் கருகி சாம்பலாகி உள்ளது.

இவ்வாறு அரசாங்கத்தின் உதவியும், உற்றார் உறவினர் உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில் மக்கள் வட்டியில் வீழ்கின்றனர். சிக்கித் தவிக்கின்றனர். தங்கள் வருமானத்தை பெருக்க நாடி வியாபாரத்தை துவங்க எண்ணும் சிலர், ஆரம்பிக்கும் இடமே வட்டி எனில், அதை திரும்ப செலுத்துவதிலேயே நீங்கள் காணும் லாபம் செல்கிறது என்றால், எவ்வாறு நீங்கள் உங்கள் பொருளாதரத்தில், வாழ்க்கையில் வெற்றி காண முடியும். ஆனால் பல நேரங்களில் மனிதர்களின் திட்டமிடப்படாத வாழ்வும், தேவையற்ற ஆசையும், இது போன்ற சூழலுக்கு காரணம் என்பது இன்னொருபுறம்.

தானும், தன் குடும்பமும் கண்ணுக்கு தெரியாத எதோ ஒரு இடத்தில், ஏதேனும் வேறு வழியில் இறந்து, தங்களை எரிக்கும் செலவுக் கூட அரசாங்கம் செய்து விடக் கூடாது என்று எண்ணியே அணுஅணுவாய் தானும் எரிந்து, தன் பிள்ளைகள், மனைவியும் எரியக் கண்டு மடிந்துள்ளார் அந்த மனிதன். அணுஅணுவாய் துடி துடித்து எறிந்த அந்த குழந்தைகளின் கதறல் எவ்வித அரசு அதிகாரிகளுக்கோ, ஆதிக்க சாதியினருக்கோ கேட்கப் போவதில்லை. அவர்களை பொறுத்தவரை ஏழைகள் எல்லாம் சாக வேண்டியவர்களே!

இஸ்லாத்தில் அருளப்பட்ட சட்டங்கள் அனைத்தும் மனிதர்களின் நன்மைகளுக்காகவும், தவறான வழியில் செல்வதில் இருந்து தடுப்பதற்காகவே இருக்கிறது. அதை கடைப் பிடிப்போருக்கு எளிதில் விளங்கிவிடும், ஆனால் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை விளங்கியும், விளங்காமலும் எதிர்க்க வேண்டுமென்றே கங்கணம் கட்டிக் கொண்டு திரிபவர்களுக்கு நாம் என்ன விளக்கியும் புரியப் போவதில்லை, காரணம் அவர்கள் தூங்குவது போல் நடிக்கும் ரகத்தை சேர்ந்தவர்கள்.

சரியான சட்ட திட்டங்களும், அரசும், அரசு அதிகாரிகளும் நியமனம் ஆகாத வரை எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் அன்றாடம் எரிந்துக் கொண்டே தான் இருக்கும்.  அதனை தடுக்க இஸ்லாத்தையும், இஸ்லாத்தில் வாழ்ந்த ஆட்சியாளர்களையும் முன்மாதிரியாக கொண்டு செயல்படத் துவங்கும் நாடே இது போன்ற கோர சம்பவங்களில் இருந்து தப்பிக்கும். மக்களுக்கும் விடுதலையும் கிடைக்கும்.

-யாஸ்மின் ரியாஸ்தீன்


Comments

  1. கந்து வட்டியின் கொடுமை காலம் காலமாக கேட்டுக்கொண்டு தான்இ ருக்கிறோம், நேற்றுக்கூட நீயுஸ் 7 செய்தி சேனலில் கணவன் தன் கண்முண்ணே தூக்கில் தொங்கியதை பற்றி அவர் மனைவி கூறும்போது நெஞ்சம் பதறியது, சட்டம் இயற்றப்பட்டு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

    காலத்திற்கேற்ப நல்ல பதிவு, சூப்பர் ��

    AAR

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்