37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்


இக்காலங்களில் புத்தகத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துக் கொண்டே வந்தாலும், ஆங்காங்கே வருடந்தோறும் நடக்கும் புத்தக கண்காட்சி புத்தக புழுக்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையாது.

அதே போல் இந்த வருடமும் அமீரகத்தில், 37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது.

கடந்த வெள்ளி அன்று சென்று வர வாய்ப்புக் கிடைத்தாலும், செல்ல வேண்டும் என்ற நோக்கம் கடந்த வருடத்தில் கண்ட ஏமாற்றத்தை நிரப்ப இந்த வருடம் தமிழுக்கென்று பிரத்யோக தமிழ் கடைகள் அமைக்கவிருப்பதை அறிந்த பின் ஆர்வம் இரட்டிப்பாகானது.

புத்தகம் என்றாலே தூக்க மருந்து என்றாகி போனாலும், நம் மொழிக்கான அங்கீகாரம் நம் வசிக்கும் அயல் நாட்டில் கிடைக்கிறது என்றால் சுண்டி இழுக்கத்தானே செய்யும்.



Hall No:7, ZB4-ல் பபாசி மூலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள தமிழுக்கான கடையை நோக்கி விரைந்ததும் அகண்ட கண்கள் சுருங்கவில்லை, எத்தனை எத்தனை புத்தங்கள், எத்தனை எத்தனை எழுத்தாளர்களின் படைப்புகள், வித்தியாசமான தலைப்புகளில் பல புத்தகங்கள் இருந்தாலும் நமக்கு அறியப்பட்ட சில எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி கண்கள் ஓடியது.

இது வரை தமிழ்நாட்டில் எந்த புத்தக கண்காட்சிக்கும் போக வாய்ப்பு கிடைக்காத எனக்கு, இந்த ஒரு ஸ்டாலின், புத்தகங்களின் எண்ணிக்கையும் பல எழுத்தாளர்களின் பட்டியல்களும் வியப்பைத் தந்தது.

சில பல புத்தங்களின் தலைப்புகளால் ஈர்க்கப்பட்டு சற்று முன்னுரை மட்டும் படித்து புத்தகத்தின் கருத்தை உள்வாங்க முயற்சித்தாலும், ஈர்க்கப்பட்ட அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியவில்லை என்பது வருத்தமே.

அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று விலை மற்றொரு இங்கு நமது வாழ்வு நிரந்தரமில்லை, எப்பொழுது வேண்டுமானாலும் பெட்டிய கட்ட வேண்டும் என்ற சூழ்நிலையில் வாழும் நம்மை போன்ற அயல்வாசிகள் பொருட்களை  சேகரித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லதென்று எண்ணியும், ஏற்கனவே சில வருடங்களாக ஊரிலிருந்து வர வைத்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாக கை வசம் உள்ளது என்பதாலும், விரும்பியவற்றில் சிற்சில புத்தகங்கள் விலையிலும், வெயிட்டிலும் குறைந்ததாக வாங்கிக்கொண்டோம்.

அடுத்ததாக தமிழ் கடைகளுக்கான மற்றொரு இடம் டிஸ்கவரி பேலஸ் சென்று சிற்சில புத்தங்களை நோட்டமிட்டு, எஸ்.ராவின் புத்தங்கள் அதிகமாக அங்கு கிடைக்கும் என்று கேள்விப்பட்டே சென்றேன்.. ஆனால் நான் எதிர்பார்த்த புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றாலும் விரும்பியவற்றை வாங்கிகொண்டு, மற்ற மொழிகளில் உள்ள சில புத்தகங்களையும், குழந்தைகளை கவர எவ்வாறான புத்தகங்கள் உள்ளது என்றும் பார்வையிட்டோம்.



அடுத்ததாக தி.மு.க-வை சேர்ந்த திருமதி கனிமொழி அவர்களின் வருகையையொட்டி அவரின் உரையை கேட்க ஏற்ப்பாடு செய்யப்பட்ட BALL ரூமுக்கு சென்றோம். அவரின் நிகழ்ச்சிக்காக ஒதுக்கபட்ட நேரம் இரண்டு மணித்தியாலங்கள் என்றாலும் அவர் பேசியது அரை மணி நேரம் மட்டுமே.

அரை மணி நேரம் என்றாலும், கோர்வையாகவும் புத்தக கண்காட்சிக்கு வந்திருப்பவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வண்ணம் சில பல கருத்துக்களை பகிர்ந்ததோடு, டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புத்தகத்தின் மீது கொண்ட ஈர்ப்பையும் ஆவலையும் குறிக்கும் வண்ணமாக, யார் அவரை காண என்ன பொருள் வாங்கி வந்தாலும் அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியை காண முடியாது, ஒரே ஒரு புத்தகம் வாங்கி வந்தால் போதும் அவரை மகிழ்வித்து விடலாம், அந்த அளவிற்கு வாசிப்பில் ஆர்வம் கொண்டவர் கலைஞர் என்பதை சுட்டிக்காட்டினார்.

அறிஞர் அண்ணா அவர்களும் அவ்வாறே இருந்ததாகவும், வாசிப்பின் மேல் கொண்ட சுவாசம் அவர் உடல் நலிவு ஏற்பட்ட காலத்தில் கூட “எங்கே ஆரம்பித்த புத்தகத்தை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று கவலை கொள்ளும் அளவில் புத்தக வாசிப்பை உயிராக சுவாசித்தார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

உயர்வு தாழ்வு என்பது வரலாற்று காலந்தொட்டே இருந்து வருகிறது என்பதை உணர்த்தும் வண்ணமாக ஏகலைவனின் சம்பவத்தை கூறினார். அரை மணி நேர உரை என்றாலும் பல கருத்துகள் அடங்கிய உரையை கொடுத்தமைக்கு திருமதி.கனிமொழி அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

கடந்த வருடமும் அதே BALL ரூமில் திரு.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்கள் என்பதும், அவரைக் காணவும், அவரின் உரையை கேட்கவும் கூட்டம் அலை மோதியது, ஆனால் வந்த கூட்டத்தை திருப்திபடுத்தும் அளவில் அவர் உரை சிறப்பாக இல்லை என்பதை கடந்த வருடமும் பதிவு செய்திருந்தேன் என்பது  குறிப்பிடத்தக்கது.

இத்தனை நாடுகள், மொழிகள் பங்கு பெறும் ஒரு சர்வேதேச புத்தக கண்காட்சியில் தமிழுக்கென்று பிரத்யோக ஸ்டால் இல்லை என்ற கடந்த வருடத்தின் ஏக்கம், பாலைவனத்தில் கண்ட பனித்துளி போல் பல தமிழ் வாசிப்பாளர்களின் தாகத்தை தீர்த்துள்ளது.

இதற்காக முயற்சி எடுத்துள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளோடு பாராட்டுகள்.

- யாஸ்மின் ரியாஸ்தீன் 


Comments

  1. ஒவ்வொரு தடவையும் போக நினைத்து விட்டது , நீங்க சொன்ன அதே இரண்டு காரணங்களே 🤭😁

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

இது ஒரு விழிப்புணர்வு பதிவு - மசூர் தால் (பருப்பு)