செத்தால் எரித்து விடுங்கள்!!!


பெண்ணாக பிறக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ரணங்கள் எண்ணற்றவை. இயற்கையாகவே உடலாலும் மனதாலும் பலவீனமானவள் பெண். அதனால் தான் “பெண்ணைக் கண்டால் பேயும் இறங்கும்” என்ற பழமொழியை ஒரு பெண்ணை நோக்கி கூறுகிறார்களோ என்னவோ.

இயற்கையாக ஒரு பெண் தன் உடலில் அனுபவிக்கும் வலிகளும் வேதனைகளும் தடுக்க இயலாது எனினினும், மற்றவர்களால் அவள் படும் இன்னல்களை தடுக்க முடியும். அவளுடைய முயற்சி அதில் சிறிதளவு உள்ளது எனினும் பெரு முயற்சியும் பொறுப்பும் அவளை சுற்றி வாழும் மனிதர்கள் கையிலேயே உள்ளது என்றால் மிகையாகாது. ஆம்.. நம்மால் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த ஒரு கேடும் வந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணினால் ஒவ்வொருவரின் வாழ்வும் சுகமே. அதுவும் பெண்களை ஒரு ஆணுக்கு தேவைப்படும் சுகப்பொருளாக எண்ணுவதை விட்டு இரத்தமும் சதையும் கொண்ட அவளையும் ஒரு உயிராக ஒவ்வொரு ஆணும் என்று கருதுகிறானோ அன்றே இவ்வுலகை பூவுலகம் எனலாம்.

ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிற்கு ஏற்ப்படும் வலிகளையும் வேதனைகளையும் நான் உணரும் போது அந்த இடத்தில் என்னை வைத்து சித்தரித்தே பல இடங்களில் அழுது, தேம்பி இருக்கின்றேன். அதுவும் அவளது விருப்பம் இல்லாமல் ஒருவன் அவளை தவறாக அதாவது உடல் ரீதியாக பயன்படுத்தும் போது சுபஹானல்லாஹ் அதை வார்த்தைகளால் விளக்கிட முடியாது. ஒரு ஆணுக்கு கிடைக்க கூடிய ஓரிரு நிமிட சுகத்திற்காக அவளது சுந்தந்திரம், வலி, வேதனை, மிச்சம் உள்ள வாழ்க்கை, அவளை சார்ந்து உள்ள குடும்பம் என்று அனைத்ததையும் தண்டித்து தனக்கு மட்டும் சுகத்தை பெறக் கூடிய அது போன்ற ஆண்களை மனிதர்களாகவோ ஏன் மிருக ஜாதியில் கூட சேர்ப்பது கூட வெட்கக் கேடானது. இந்த சமூகத்தில் வாழும் ஒரு புது வித நோய் பிடித்த ஜீவ ராசியாக தான் அவர்களை கருத முடியும். உண்மையில் அவர்களுக்கு உள்ளம் என்று இல்லவே இல்லையா?? இவர்களுக்கு எவ்வித தண்டனை பொருந்தும்??, இவர்களை போன்ற நல்லவர் உருவில் நடமாடும் மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்க இவர்களுக்கு தரும் தண்டனை தான் என்ன??

செய்திதாள்களிலும், நீயுஸ் சேனலிலும் “பெண் பலாத்காரம்”, “பெண் கற்பழித்து கொலை”, சிறுமி வன்புணர்வு என்று பல செய்திகளை காணும் போது இது போன்ற பல கேள்விகள் என்னுள் எழும்பினாலும் இந்த கேள்வி மிகைத்து போனது அந்த குறும்படத்தை கண்ட பின்னே. ஆம்! BURN MY BODY” என்ற மலையாள குறும்படத்தை கண்ட பின்னே என்னுள் மிகைத்து போனது. அதனின் தாக்கம் உண்மையில் என்னை உறைய செய்து விட்டது.  அக்குறும்படம் சித்தரிப்பு என்றாலும் அதில் உள்ள கதை உண்மையானது என்று அதன் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். அது உண்மை இல்லை என்று யாராலும் மறுக்கவும் முடியாது. ஏனெனில் அப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற உலகில் தான் நாமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

கதையின் கருவை சுருங்கச் சொல்ல வேண்டுமனில் “சினிமா நடிகையாக இருக்கும் ஒரு பெண் தனது சொந்த தாய் மாமனின் பாலியல் தொந்தரவால் இனி இவ்வுலகில் வாழ விருப்பமில்லை என்று மரணத்தின் மூலம் தப்பிக்க விஷத்தை உண்டு தன்னை மாய்த்துக் கொள்கிறார். ஒருவர் மரணித்தப் பின் அவரை கண்டால் எதிரியாக இருந்தால் கூட அந்த ஆடி அடங்கிய பிணத்தை கண்டு சற்று கலங்க தோன்றும் தங்கள் வாழ்வு எம்மாத்திரம் என்று. அப்படி இருக்க போஸ்ட் மார்டத்திற்கு மார்சுரியில் வைக்கப்பட்டிற்கும் அந்த பெண்ணின் உடலை எடுத்து கால்களை அவனுக்கு ஏற்றாற்போல் கட்டிபோட்டு மார்சுரியின் பாதுகாவலர் அந்த நடிகையை வன்புணர்வு செய்கிறான். ச்சே.. என்ன ஒரு மனித தன்மையற்ற கொடூரமான செயல். அம்மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் அதனைக் கண்டு வீறிட்டு அழுது தனது தாய் தந்தையருக்கு டைரி எழுதுகிறார். அன்று நடந்த முழு நிகழ்ச்சிகளையும் எழுதி முடித்து விட்டு, என் தாய் தந்தையாகிய நீங்கள் நான் இறந்து போனால் என் உடலை வேறு எங்கும் விட்டு வைத்து விடாதீர்கள். உடனடியாக எரித்து விடுங்கள்.. ஆம் BURN MY BODYஎன்று எழுதுகிறார். உண்மையில் இன்று பெண்களின் நிலை இவ்வாறான மோசமான நிலையிலேயே உள்ளது.  இது போன்ற சம்பவங்கள் அமெரிக்கா, கேரளா என்று பல இடங்களில் நடந்ததையொட்டி அதனால் ஏற்ப்பட்ட தாக்கம் இப்படி ஒரு குறும்படத்தை எடுக்க தோன்றியதாக அப்படத்தின் இயக்குனர் கூறுகிறார்.



நமக்கு தெரிந்தும் தெரியாமலும், நாம் வாழும் ஊரிலும், நாட்டிலும், உலகெங்கிலும் நடக்கவே செய்கிறது. நமெக்கென்ன என்று இருப்பதை விட இதில் இருந்து எவ்வாறு நம்மை காத்துக் கொள்வது என்று  ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும் என்று ஆலோசனைகளை உயிருடன் வாழும் ஒவ்வொருவருக்கும் வழங்கினாலும், மரணித்த பின்னர்.. சுபஹானல்லாஹ்.. நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.. இறைவனே போதுமானவன்...

ஒரு மனித மிருகனால் வாழும் போது அனுபவித்த துன்பத்திலும், கொடூரத்திலும் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வழியில்லாமல் சாவை தேர்ந்தெடுக்கும் அந்த பெண்ணின் உயிரற்ற உடலையும் விட்டு வைக்காத அந்த ஆண் மிருகத்தை என்னவென்று சொல்வது?? 

வாழும் போது  கிடைக்காத அமைதியை செத்தாலும் தராத இது போன்ற ஆண்களை ஒரு தனிப்பட்ட யாருமற்ற கொடூரமான சூழலில் வாழ வைக்க வேண்டும். அணு அணுவாக துடி துடித்து சாகும் தணடனையை கொடுக்க வேண்டும். அது நல்லவர்களாக நடித்துக் கொண்டு பசுத்தோல் போர்த்திய புலியாக ஊருக்குள் வாழும் மனித மிருகங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். எத்தனை திரைப்படங்களும், குறும்படங்களும் வந்தாலும், ஏன் ஒரு பெண்ணின் உண்மையான வலியை, அலறலை நேரில் கண்டாலும் அதிலும் சுகம் காணும் ஆண் ஜென்மங்களே இவ்வுலகில் அதிகம் எனலாம்.. பிறந்த பச்சிளம் பெண் குழந்தைகள் முதல் பிணம் வரை விட்டு வைக்காத இவர்களை போன்ற ஆண்களை துடி துடிக்க வெட்டி போட்டாலும் தகும் எனலாம்.

பிணவறையில் உள்ள பிணத்தை எடுத்து வன்புணர்வு செய்யும் இது போன்ற ஜீவன்கள் (இவர்களை எந்த இனத்தில் சேர்ப்பது) புதை குழியில் இருக்கும் பிணமாகிய பெண்ணை எடுத்து வன்புணர்வு செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்???

ஒரு பெண்ணை துரத்தி துரத்தி இப்பூமியில் வாழ வழியில்லாமல் சாகச் செய்தவர்கள் இப்பூமியில் புதைக்க கூட ஒரு இடம் தரமாட்டார்கள் போல்!!!!

யா அல்லாஹ்!! வாழும் போதும் இறந்த பின்னும் என்னையும், என்னை போன்ற பெண்களையும் கண்ணியப்படுத்துவாயாக!!! எங்கள் உடலை பாதுகாப்பாயாக!!! இது போன்ற மனித மிருகங்களிடம் இருந்து எங்களை பாதுகாப்பாயாக!!! ஆமின்..

குறிப்பு: ஆர்ய கிருஷ்ணன் என்ற மலையாள இயக்குனர் எழுதி இயக்கிய இக்குறும்படத்தை யூட்யூபில் காணலாம்..

உங்கள் சகோதரி
யாஸ்மின் ரியாஸ்தீன் 


Comments

  1. திரைப்பட விமர்சனம்.. அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்