மனிதத்தை உணருங்கள்!!!

இறைவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!!!

எந்த தவறும் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவதும், அதற்காக அவர்கள் ஒதுக்கப்படுவதும் காலங்காலமாக சிலரால் சிலர் அனுபவித்து வருவது எங்கெங்கும் நம்மால் காண முடிகிறது. நாம் இந்தியாவில் வாழ்வில் இந்தியாவையே எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம்.

ஒருவர் எந்த வித குற்றமே செய்யாமல் அவர் தண்டனையா?? அனுபவிக்கிறார் என்றால் ஒன்று அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராகவோ அல்லது தலித் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஏனென்றால் இவர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், குற்றப்படுத்தலாம், அவர்கள் விரும்பியதை உண்பதை தடுக்கலாம் அதற்காக மிருகத்தை விட மோசமாக சித்திரவதை செய்யலாம் என்ற கோட்பாட்டை, வெறியை ஆதிக்க சக்தியினர் என்றென்றும் தங்கள் கொள்கையாக வைத்துள்ளனர். அதை புற்றுநோய் போல் எங்கெங்கும் பரப்பி வருகின்றனர்.

இவர்களின் கோட்பாட்டை இவர்களோடு நில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாமானிய மக்களிடமும், மற்றவர்கள் அறியாத அளவில் வலுக்கட்டாயமாக திணித்து உள்ளதும், அதனை சிந்திக்காமல் அதை அவர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.

இந்தியாவின் எல்லா பகுதியையும் விட தமிழகம் சாதி மதத்தை கடந்த ஒரு ஒற்றுமையை தனக்குள் வைத்திருக்கிறது என்றே இன்னும் நாம் நம்புகிறோம். நம்புவோம்.

கடந்த 2015-ஆம் ஆண்டின் ஏற்ப்பட்ட வெள்ளமும் அதில் இஸ்லாமியர்களின் அளப்பரிய தொண்டும், அற்பணிப்பும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியத்தை காக்க நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் என்று அனைத்திலும் தங்களை எவ்வித பாகுபாடுமின்றி முஸ்லிம்கள் தங்களை இணைத்துக் கொண்டது  உலகமெங்கும் தமிழகத்தின் மதம் கடந்த மனிதத்தை திரும்பி பார்க்க செய்தது. தமிழகத்திற்கு கிடைத்த கின்னஸ் சாதனையாக நாம் அகம் மகிழ்ந்தோம், ஒற்றுமையில் மாமன், மச்சானாக வாழும் எங்களை மிஞ்ச யாருமில்லை என்று ஆர்ப்பரித்தோம்..

ஆனால் அந்த ஒற்றுமை, மனிதம், மாமன் மச்சான் உறவு எல்லாம் பிரச்சினைகள் வரும் போது கை கொடுக்கும் நேரத்திலும், அதில் தங்களை எவ்வித எதிர்ப்பார்ப்பும், சுய நலமின்றி தங்கள் உடல், பொருள் ஆவிக் கொண்டு இணைத்துக் கொள்ளும் போது மட்டும்தானா???

ஏன் இல்லை, எல்லா நேரத்திலும் நாங்கள் அப்படித்தான் என்று சொல்ல ஒரு சிலர், ஆம் ஒரு சிலர் மட்டுமே காத்திருப்பதாக தோன்றுகிறது. காரணம் இன்று தமிழகத்தின் சென்னை போன்ற பல இடங்களில் ஒரு முஸ்லிம் வீடு கேட்டால் மறுக்கப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது. உண்மை தான், ஏற்கனவே நண்பர்கள் சொல்லும்போது வருத்தப்பட்ட போதும் நம்பாத மனம் இப்போது நம்பவே செய்கிறது.

முஸ்லிம்கள் என்றால் தீண்டதகாதவர்கள் போல் ஏதேனும் வாய்ப்புகளிலாவது ஒதுக்கி வைப்பது கூனி குறுகச் செய்கின்றது. உண்மையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களின் அற்பணிப்பை, தியாகத்தை அவர்களின் உண்மை முகம் இது தான் என்று பாராட்டி பல பதிவுகள் போட்ட சமூக ஆர்வலர்களும், முகநூல் போராளிகளில் ஒருவராகவும் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். 

தன் பெயரை தவிர தன்னை எவ்விதத்திலும் முஸ்லிமாக காட்டிக் கொள்ளாத, ஏன் முஸ்லிம்களை பல விதத்தில் எதிர்க்க கூடியவர்களில் ஒருவரான ஹமீத் என்கின்ற மனுஷ்ய புத்திரனுக்கே இந்நிலை தான். அவரின் காரசாரமான சில நடுநிலையான பதிவுகளுக்கு கை தட்டி பாராட்டு தெரிவித்த பல பேர், முஸ்லிம்களை தங்களுக்கு எதிரியாக சித்தரித்துக் கொண்டவர்களே. ஏனெனில் அவரை முஸ்லிம்களின் எதிரியாக கண்டனர். ஒத்துழைப்பை நல்கினர்.

அப்போதெல்லாம் மார்தட்டிக் கொண்ட “மனுஷ்ய புத்திரனுக்கே” இன்று வீடு கொடுக்க சிந்திக்கின்றனர், அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். காரணம் அவர் பெயர். தனக்கும், தன்  கருத்திற்கும் வலு சேர்க்கும் பலரது பின்னூட்டங்கள் எல்லாம் தன்னை மாமன் மச்சானாக பார்க்கும் மாற்று மத நண்பர்களே என்று எண்ணி பெருமைக் கொண்ட அவருக்கு தான் இந்நிலை. (பார்க்க படம்)

உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஒரு முஸ்லிமின் துணையுடன் நீங்கள் குடியிருந்தால் உங்கள் உயிரும் உடமையும் முன்பு எப்போதும் சிந்திக்காதப்படி பாதுகாப்பாக பத்திரமாக இருக்கும் என்பதை எப்போது உணர போகிறீர்கள்.

இன்று சென்னை, நாளை தமிழகத்தின் எல்லா பகுதியிலும்ம் இந்நிலை வராது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை, தங்கள் திட்டத்தின் அடிப்படையை திணித்து விட்டதாக சத்தமின்றி சிரித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியினரின் அலுச்சாட்டியத்தை எப்போது உணர போகிறீர்கள்.
நீங்கள் செத்தால் அவர்களுக்கு வாழ்வு என்றால் உங்களை பலியிடவும் தயங்க மாட்டார்கள் என்ற கோர முகத்தை எப்போது உணர போகிறீர்கள்??? 

எல்லாரையும் குற்றப்படுத்தி விட முடியாது என்பது எல்லா விசயத்திலும் விதிவிலக்கு என்றாலும், ஒரு சிலரும் குற்றப்படுத்தப்படாத நிலை எப்போதும் வரும் என்ற ஆதங்கமே இப்பதிவின் நோக்கம்.

மனிதன் மறதிக்காரன் என்பதற்காக சுயநலமற்ற எங்கள் உள்ளங்களை மீண்டும் மீண்டும் நிருபீக்க இயற்கையை தான் அப்பப்போ பேரிடர் விளைவிக்க கேட்டிட முடியுமா, போராட்டங்களை தேடி ஓடி ஓடி எங்கள் வாழ்வின் போராட்டத்தின் முடிவை தேட முடியுமா??

எப்போது மாறும் இந்நிலை, வாயால் மட்டும் மாமன், மச்சான் என்று நடித்து கொண்டிருக்கும், தன் தேவைக்காக அருகில் வைத்துக் கொண்டிருக்கும் சுயநலவாதிகளின் கூட்டம் எல்லா இடத்திலும், எல்லா சமயங்களிலும் இருக்கவே செய்கின்றனர்.

உங்கள் கற்பனையின் பாத்திரத்திற்கு இன்று வரை பலியாகி வரும் முஸ்லிம்களின் உண்மையான நற்குணத்தை எப்போது ஏற்றுக் கொள்ள போகிறீர்கள்??? எப்போது புரிந்துக் கொள்ள போகிறீர்கள்???

எல்லா வகையினரின் பண்டிகைக்கும் பண்டங்களை மட்டும் பரிமாறி, உள்ளத்தின் எதோ ஒரு இடுக்கில் வெறியை வளர்த்து கொள்வது, முழுக்க இனிப்பு நிறைந்த பானத்தில் துளி விஷம் கலப்பதற்கு சமம்.

இஸ்லாமும் உண்மையான முஸ்லிமாக வாழ்பவர்களும் மனதளவிலும் யாருக்கும் இடையூறு செய்ய மாட்டார்கள் என்பதை நம்புங்கள். போலி பெயரில் உலா வந்து கலவரத்தை கைக் கொண்டு, நமக்குள் பிரிவினையூட்டும் வெறியர்களை அடையாளங் காணுங்கள். நம் உணரும் போலியற்ற மாமன் மச்சான் உறவை நம் வருங்கால சந்ததியினருக்கும் சுவைக்கத் தாருங்கள். 

செய்தி ஆதாரம்: https://goo.gl/mN3Wbu 

உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன் 

Comments

  1. Masha Allah.. excellent views!

    ReplyDelete
  2. அருமை, வாழ்த்துக்கள் அக்கா...(y)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்